அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி அரச சேவையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பள கொடுப்பனவை உரிய தினத்தில் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் பதவி நிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை உரிய தினத்திலிருந்து சில தினங்களின் பின்னர் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமுல்படுத்துவதற்கு குறிப்பிட்ட காலம் எடுப்பதன் காரணமாக, அரச நிதி நிர்வாகத்திற்காக ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒரு சில மாதங்களுக்கு அதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.