
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சமூக நீதிக்கான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துர்கா மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கலாசார முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜனாதிபதிக்கு இந்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வண்ணமயமான தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை குறித்த அறிக்கையை பெப்ரவரி மாதம் நாட்டுக்கு வெளியிடவுள்ளதாக, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அடுத்த வாரம் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உண்மையைக் கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அதே போன்று பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை கொண்டு வர இருக்கிறோம். வடக்கிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தை கொண்டு வர தயாராவதாக சிலர் கூறுகின்றனர். நாட்டில் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தவே இதனை அறிமுகம் செய்ய இருக்கிறோம். கடந்த வருடம் இதனை தெற்கிற்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.
அத்துடன் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த உத்தேசித்திருக்கிறோம். அது வடக்குடன் மட்டும் தொடர்புள்ள பிரச்சினையல்ல. தெற்கில் உள்ள முதலமைச்சர்களும் இதனை அமுல்படுத்துமாறு கோருகின்றனர். இதனை கலந்துரையாடி செயற்படுத்த இருக்கிறோம்.இவற்றை எதிர்வரும் ஓரிரு வருடங்களில் கட்டம் கட்டமாக முன்னெடுப்போம் என்றார்.