
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோருக்கு 310 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெறவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்திருந்த போது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சிசிர மெண்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மென்டிஸ் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து 10 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று அறிவித்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.