January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் தீர்வு: தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதிக்கு கால அவகாசம்!

File Photo

அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்தடன் நடத்தப்பட்ட சந்திப்புகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் 5 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளே இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, இனப் பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான வரைபொன்றை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கம் தங்களிடம் கையளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது பேச்சுக்களை நடத்தி பலனில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு விடயம் ஆகியன தொடர்பில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

இவ்வேளையில் பதிலளித்துள்ள ஜனாதிபதி 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும், அதன்போது தீர்வுகள் குறித்து பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு உரிய தரப்பினருக்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவித்துள்ளார்.