January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு – யாழ். ரயில் சேவைகள் இடை நிறுத்தம்!

கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான ரயில் சேவைகள் ஜனவரி 5 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

ரயில் தண்டவாள புனரமைப்பு பணிகள் காரணமாக 5 மாதங்களுக்கு கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டிய ரயில்கள் அனுராதபுரம் வரையில் செல்லும் என்றும், அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவைகள் யாவும் அனுராதபுரத்திலிருந்து ஆரம்பித்து கொழும்பு வரை தமது சேவையைத் தொடரும் என்று கூறியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரை யாழ்ராணி ரயில் சேவை இடம்பெறும். இதன்காரணமாக தலைமன்னார் – கொழும்பிற்கு இடையிலான ரயில் சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் பயணிகள் வவுனியா வரை ரயிலில் சென்று பின்னர் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரை பஸ்ஸில் சென்று பின்னர் மீண்டும் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு வரை ரயிலில் பயணிக்கமுடியும்.

அல்லது வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து பஸ்ஸில் அனுராதபுரம் வரை பயணித்து பின்னர் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு வரை ரயிலில் பயணிக்கவும் முடியும்.

இந்த காலப்பகுதியில் அதிசொகுசு, சொகுசு, அரைசொகுசு பஸ்கள் உள்ளடங்களாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.