January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டோம்”

நாடு ஏற்கனவே நெருக்கடியான நிலையைக் கடந்துவிட்டதாக கருதுவதாகவும் இதனால் 2023 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையைக் குறிக்கும் ஒரு தீர்க்கமான ஆண்டாக இருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம் என்று ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த ஏனைய நாடுகள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் இன்னும் அடையத் தவறிவிட்டோம். நாட்டில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையைப் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் தசாப்தத்திற்குள் வளமான இலங்கையை கட்டியெழுப்ப உத்தேசித்துள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நாம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேலைத்திட்டத்தில் நாட்டை முன்னிலைப்படுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் தீர்க்கமான ஆரம்ப நடவடிக்கைகளுக்காக பொறுமையுடனும் தைரியத்துடனும் காத்திருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

புதிய நம்பிக்கைகளுடன் நாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வளமான இலங்கைக்கான கதவுகளைத் திறக்கும் வெற்றிகரமான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.