
போதைப் பொருட்களை பயன்படுத்திய பின்னர் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்போது மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமே பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கையை விரிவுப் படுத்தி போதையை ஏற்படுத்தக் கூடிய வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தும் சாரதிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்காக வீதி பாதுகாப்பு தேசிய சபையினால் 160 மில்லியன் ரூபா பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி போதைப்பொருள் பாவனை செய்தவர்களை இனங்காணுவதற்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா கூறியுள்ளார்.