தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுத்துள்ளது.
இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி, வரும் 9 ஆம் திகதி நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கடும் மழையுடன் கூடிய காலநிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாண்டஸ் புயல் காரணமாக இலங்கையின் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் மீன்பிடி செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், காங்கேசன்துறை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பிராந்தியத்தில் மணித்தியாலத்திற்கு 65 முதல் 75 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைணக்களம் தெரிவித்துள்ளது.