சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாத்திரம் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகரங்கள் இல்லை. அங்கு நகரங்கள் இருந்தால் தான் நகரங்களை அபிவிருத்தி செய்யலாம் என்று இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணி அபகரிப்பு, அரசியல் கைதி விடுதலை, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து எமக்கு மக்கள் வழங்கிய பொறுப்பை முறையாக செயற்படுத்தி வருகிறோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன. அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட இரு பிரநிதிகளுக்கு செயற்திறன் இல்லையா என்பது தெரியவில்லை என்றும் சாணக்கியன் கூறியுள்ளார்.
இதேவேளை அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை. அமைச்சர் டக்லஸ் தேவானந்தா காலம் காலமாக அமைச்சராக பதவி வகிக்கிறார் மறுபுறம் அங்கஜன் இராமநாதன் பலமுறை இராஜாங்க அமைச்சுக்களை வகித்துள்ளார்.
தற்போது இருவர் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே அதிகாரத்தை வழங்குமாறு கோருகிறோம். சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.