January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரலாற்றில் முதல் தடவையாக அதிகளவான மாணவர்கள் பாராளுமன்றம் வருகை!

பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 32 பாடசாலைகளைச் சேர்ந்த 5,000இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.

உலகப் பாராளுமன்றங்களுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் இவ்வளவு பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமை சாதனையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொது மக்கள் கலரியானது கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டதையடுத்து, தீவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25,000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களை அவதானிக்க வந்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு குவளை பால் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.