January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களா?: ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பு!

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிவித்த பதில், அதன் அர்த்தத்தை திரிபுப்படுத்தும் வகையில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளன என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

மாகாண சபைகளில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்கத் தயார் என்று ஜனாதிபதி கூறியிருந்தாரே தவிர, தவிர மாகாண சபைகள் கலைப்பு தொடர்பில் அவர் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவேற்றுத் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் சரியான ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான களமாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் செயற்படும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிலைப்பாடாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.