இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் வீசா உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் குடியுரிமை பெறும் 22 வயதுக்குட்பட்ட மனைவி அல்லது குழந்தைக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 500 டொலர்களாக திருத்தப்பட்டுள்ளது.
குடியுரிமையின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன்லைனில் மின்னணு பயண அங்கீகாரத்தைப் பெறுவதற்கான கட்டணம் 50 டொலராகவும் வணிகங்களுக்கு 55 டொலராகவும் திருத்தப்பட்டுள்ளது.
இலங்கையர் அல்லாத வாழ்க்கைத் துணையை சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான வீசா வழங்குவதற்கான கட்டணம் 150 டொலராக இருக்கும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.