File Photo
இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதன்போது வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடி தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், கோவிந்தம் கருணாகரன், வினோ நோகராதலிங்கம்,எஸ்.சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னிறுத்தும் வகையில் ரணிலுடனான பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளை முன்வைவக்க இந்தக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நில அபகரிப்பு நிறுத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், அதிகார பகிர்வு சம்பந்தமான அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை அமுல்படுத்தி மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட்ட வேண்டும், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசத்தில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான புது அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
-(3)