
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
வரவு செலவுத்திட்டம் நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 15 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு இன்று அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதன்போது மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்கவுள்ளது.
இதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் குழுக்கள் அதனை எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை நாளை முதல் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு டிசம்பர் 8 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.