போலி வங்கி ஆவணங்களைப் பயன்படுத்தி 12 கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் -நாவாந்துறையைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை ஏமாற்றி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பபடுகின்றது.
பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் ஊடாக இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையரை இந்த ஆவணங்களின் மூலம் ஏமாற்றி, தமது தந்தை ஒரு பணக்கார தொழிலதிபர் என்றும் அவருக்கு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் உட்பட பண சொத்துக்கள் இருப்பதாகவும் கூறியே மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பில் நோர்வேயில் உள்ள பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைதாகியுள்ளனர்.
இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.