ஜனாதிபதி செயலகத்தின் வட மாகாண ஒருங்கிணைப்பு உப அலுவலகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வவுனியாவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்த எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை அங்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும் நடைபெற்றது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 8 குழுக்களை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.