
கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, அனைத்து வங்கிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான ஆலோசனைக் குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி ஏற்கனவே கடன் பெற்றவர்களுக்காக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய நிலைமயில், வங்கிக் கடன் வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளதால், கடனைப் பெற்றுக்கொண்ட சிலருக்கு தமது சம்பளம் முழுவதையும் கடன் தவணையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய வட்டியை சலுகைக் காலத்தில் செலுத்த முடியும் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.