March 3, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுற்றுலா விசாவில் பெண்கள் கடத்தல்: பிரதான சந்தேக நபர் கைது!

இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் பெண்களை துபாய் மற்றும் ஓமானுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களை விற்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய போது, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

44 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வேலைவாய்ப்புகளை பெற்றுத் தருவதான கூறி துபாய் மற்றும் ஓமானுக்கு பெண்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று அவர்களை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து மனித கடத்தல் புலனாய்வு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமரகோனின் மேற்பார்வையில், மூன்று அதிகாரிகள் கொண்ட குழு ஓமான் சென்று அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இதன்போது இலங்கையில் உள்ள முகவர் நிறுவனத்தின் தலையீட்டில் அதிகாரியொருவர் ஊடாக பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்கப்படுவதாக தெரியவந்தது

இவ்வாறான நிலைமையில் பிரதான சந்தேக நபர் இன்று நாடு திரும்பிய போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதாகியுள்ளார்.