கனடா நோக்கி இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற கப்பலின் மாலுமி தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வியட்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்தக் கப்பல் கடலில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கிய போது அந்தக் கப்பலின் மாலுமி அதனை கைவிட்டுச் சென்றுள்ளதாகவே கூறப்படுகின்றது.
இலங்கையில் இருந்து கனடா நோக்கி 303 பேர் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அந்தக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், இலங்கையில் இருந்து பல்வேறு குழுக்களாக மியன்மாருக்கு பயணித்து, அங்கிருந்து கனடா நோக்கி சென்றுகொண்டிருந்த போதே கப்பல் இடையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வியட்நாம் அதிகாரிகளினால் மீட்கப்பட்டவர்களிடையே கப்பலின் மாலுமி இல்லை என்று கூறப்படுகின்றது. மாலுமி கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகிய போது, அதில் இருந்து இறங்கி வேறு படகொன்றில் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
இதேவேளை வியட்நாமில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் ஊடாக, கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் தாம் இலங்கைக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை எனவும், தங்களை ஐநா பொறுப்பேற்று கனடா அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வியட்நாம் செய்திகள் தெரிவிக்கின்றன.