November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வடக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு”

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம்  முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நிறைவுசெய்வதற்காக மேலதிக குழுக்களை நியமித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அடுத்த வருடம் கொண்டாடப்படும் 75 ஆவது சுதந்திர தினத்தின் போது இந்தப்பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, வெளிநபர்கள் எமது நாட்டு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என்றும் நாமே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கொப்-27 மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பிய நிலையில், பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது பயங்கரவாத தடுப்புச் சட்டம் , உண்மையை கண்டறியும் மற்றும் நல்லிணக்கம்  தொடர்பான ஆணைக்குழு மற்றும்  ஊழல் தொடர்பில் புதிய சட்டங்கள் உருவாக்க வேண்டும் என்றும்  ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனவரி, பெப்ரவரி மாதமளவில்  இது தொடர்பான சட்டங்களை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.