பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் வரவு செலவுத்திட்ட விவாதம் இடம்பெறும் காலப்பகுதிகளில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தினேஸ் குணவர்தன இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளார்.
இந்த யோசனைக்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, அவசர சிகிச்சை காரணமாகவோ அல்லது அரசாங்கத்தின் அவசர காரியங்கள் தவிர்த்து வேறு காரணங்களுக்காக அவர்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை நிதி அமைச்சரினால் நிகழ்த்தப்படவுள்ளதுடன், அதனை தொடர்ந்து இரண்டாம் வாசிப்பின் பின்னரான விவாதம் நடைபெற்று டிசம்பர் 8 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.