அடுத்த சில நாட்களுக்கு இலங்கை முழுவதும் அதிக மழை வீழ்ச்சியுடனான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதாகவும், இதனால் நாட்டில் அதிக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும், சில இடங்களில் இடி, மின்னல் தாக்கங்கள் இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும், இதன்போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.