ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் ஜனாதிபதியை சந்தித்து தமிழ் மக்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் மனோ கணேசன் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் பேஸ்புக் பதிவு வருமாறு,
”நானும், அமைச்சர் டக்ளஸ் தேவாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதியுடன் உரையாடினோம்.
பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐஜிக்கு பணிப்பதாக ஜனாதிபதி சொன்னார்.
இன்று விடுவிக்கப்பட்டதை போல், பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி மேலும் சொன்னார்.
அருகிலிருந்த பிரதமர் மற்றும் அமைச்சர் மனுஷ, முன்னாள் எம்பீக்கள் சாகல, யோகராஜன் ஆகியோரும் சாதகமாக கருத்து பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.
பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51% உணவின்மை பிரச்சினை காணப்படுகிறது என கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்க கோரினேன். ஜனாதிபதி கொள்கைரீதியாக உடன்பட்டார்”