அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் 174 வாக்குகளால் பாராளுமன்றதில் இன்று நிறைவேற்றப்பட்டது.
22ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதம் நேற்று முதல் இடம்பெற்று வந்த நிலையில், இன்று மாலை அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இவ்வேளையில் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது திருத்தத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டது.
ஆனால், எவரும் எதிராக வாக்களிக்கவில்லை.
அத்துடன் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு அதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
இதேவேளை, இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்ட ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
ஆனால் வாக்களிப்பில் மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன் அவர்களுடன் 40 க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
இந்த திருத்த சட்டமூலம் 22ஆவது திருத்தமாக சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் சட்டமான பின்னர் 21 ஆவது திருத்த சட்டமாக அமையும் வகையில் திருத்தப்பட்டு வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.