இலங்கையில் பல பிரதேசங்களுக்கு கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையில் வடக்கு, மத்திய, சபரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போத வடக்கு அந்தமான் தீவுகள், தெற்கு அந்தமான் தீவுகள் மற்றும் தென் கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய கடற்பிராந்தியங்களை அண்மித்து உருவாகும் தாழமுக்க வலயம் எதிர்வரும் 22 ஆம் திகதி மேல் மற்றும் வடமேல் திசை நோக்கி பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்க நிலையானது எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை குறிப்பிட்ட கடற்பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.