22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த விவாதத்தை தொடர்ந்து நாளை மாலை இது தொடர்பான வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று காலை அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சபையில் முன்வைத்து விவாத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது 19 ஆவது திருத்தம் மற்றும் 20 ஆவது திருத்தத்தில் உள்ள நல்ல விடயங்களை உள்ளடக்கியதாக 22 ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவளிக்கத் தயார் என்று கூறினார்.
எனினும் அதற்காக சில நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இரண்டரை வருடங்களில் பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதிக்குரிய அதிகாரம் அவ்வாறே பேணப்பட வேண்டும் என்பதுடன், ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இதேவேளை இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினராக முடியாதவாறு புதிய அரசியலமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களில் எவ்வித திருத்தங்களும் செய்யப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.