January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி ரணிலை பாராட்டிய டொனால்ட் லு!

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள டொனால்ட் லு, நேற்று மாலை கொழும்பில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.

இதன்போது இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் அமைதியான சூழலை ஏற்படுத்தியதற்காக ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள உதவி இராஜாங்கச் செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே சவால்களை வெற்றிகொண்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான காலகட்டத்தில், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் சகலவிதமான ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாகவும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் டொனால்ட் லூ தெரிவித்துள்ளார்.