நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய மூன்று முக்கிய நாடுகளுடன் நேற்று ஆரம்ப கட்டக் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பான பிரச்சினையை விரைவில் தீர்க்கவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சியம்பலாண்டுவ பகுதிக்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்கு மக்கள் மத்தியில் கருத்து கூறுகையிலேயே இதனை கூறியுள்ளார்.
வீதிக்கு வந்து இரத்தம் சிந்தப் போவதாக சிலர் கூறியதை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இரத்தம் சிந்துவதற்கு முன் வாழ வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்களுக்கு உணவு வழங்கும் முறையான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால் இரத்தம் சிந்துவதற்கு அன்றி பட்டினியில் சாகவே நேரிடும் என்று குறிப்பிட்ட அவர், பாராளுமன்றத்தில் மாத்திரமே அரசியல் பேசப்பட வேண்டும் எனவும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.