File Photo
இலங்கையில் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலையால் 55 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மேல், சபரகமுவ, தென் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் தொடர் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
இதனால் பிரதான ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், தாழ்நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வரக்காப்பொல – தும்பலியத்த மாயின்நொலுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஹொரணை – வகவத்த பகுதியில் நீர் நிறைந்த மாணிக்கக்கல் சுரங்கத்தில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலையால் பல பிரதேசங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.