November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரபாகரன் செய்ததைப் போன்று செய்கின்றனர்”

ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறுவர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உடல், உள ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், மத, சமூக ரீதியாகவும் முழுமையாக வளர்ச்சி காண்பதை உறுதி செய்வதற்கும், அவர்கள் சுயநல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும், பாகுபாடு காட்டப்படுவதில் இருந்து அவர்களைப் பாதுகாக்கவும் ஏற்ற வகையில் அவர்களின் நலனை மேம்படுத்துவற்காக அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

குறிப்பாக பிள்ளைகளை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது. பிரபாகரன் செய்ததைப் போன்று கேடயமாகவே கொண்டு செல்கின்றனர். அவ்வாறு செய்தால் அதனை நிறுத்த வேண்டி ஏற்படும். அரசியலமைப்பின் 27 ஆவது சரத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இது விளையாட்டாகிவிடும். ஒரு பிள்ளைக்காவது ஏதாவது நடந்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.