January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் தயாராகி வருகிறது”

அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விளக்கமளித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது நல்லதொரு அறிகுறி எனவும், கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத் தலைமை பொறுப்பை ஜப்பானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

கடன் வழங்கி உள்ள இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் மிக விரைவில் அவர்களுடன் பலதரப்பு இணக்கப்பாட்டை எட்டுவது குறித்தும் அவர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷென் லோனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி, கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டுமெனவும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அதன் ஊடாக சிங்கப்பூருடன் நிலையான பொருளாதார அணுகுமுறையை ஏற்படுத்துவதன் வாய்ப்பு தொடர்பாகவும் தென்கிழக்காசியாவுடனான நாட்டின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி,பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.