Photo: Facebook/ Kumanan Kana
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட மீனவர்களின் போராட்டத்தின் போது பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு எதிராக மற்றுமொரு மீனவர் குழுவொன்று அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயேஅங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் அங்கு கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தமக்கான தீர்வு கிடைக்கும் வரை முல்லைத்தீவு மீனவர் அமைப்புகளை சேர்ந்த குழுவொன்று இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்தது.
கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணை போகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரியும், சுருக்குவலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மீனவர்கள் அங்கு அமைதியற்ற முறையில் நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் வீதி பகுதியில் மற்றுமொரு குழு போராட்டத்தில் ஈடுபட்டது.
இதன்போது இருதரப்பும் சந்தித்துக்கொள்ளாத வகையில் பொலிஸார் அங்கு வீதித் தடைகளை போட்டியிருந்தனர். இவ்வேளையில் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களை நோக்கி மற்றைய குழு வந்த நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப் புகை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.