பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்தே முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹசந்த குணதிலக்க ஆகியோரை கைது செய்து தடுத்து வைத்திருப்பது ஏன் என்றும் அவர்கள் செய்த குற்றம் என்ன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பினர்.
இதேவேளை வசந்த முதலிகேவை இரவு நேரங்களில் மல்வானை, கலவானை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதாகவும், ஏன் இவரை இரவில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் இது அவரின் உயிருக்கு ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகையில், அரசாங்கமே பிரச்சனைகளை தேடி அந்தத் தீர்மானங்களுக்கு காரணமாகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.