கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாணத்தை நாசப்படுத்தியுள்ளார். இவரது செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் பால் உற்பத்தி தொழிற்துறையை முழுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருசில பகுதிகள் மேய்ச்சல் நிலங்கள் என இதுவரை வர்த்தமானி வெளியிடப்படவில்லை என்றும், கிழக்கு மாகாண ஆளுநர் இந்த மேய்ச்சல் நில பிரச்சினை தொடர்பில் முறையாக செயற்படவில்லை என்று சாணக்கியன் அதன்போது தெரிவித்தார்.
நாட்டில் விவசாயத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பால் உற்பத்தி தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. பால் உற்பத்தியாளர்கள் மேய்ச்சல் நிலம் இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, இவ்விடயம் தொடர்பில் மகாவலி அதிகார சபைக்கும், கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.