பெண்களுக்கான சுகாதார அணையாடைகளை (சானிட்டரி நாப்கின்) உள்நாட்டில் தயாரிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து மூலப்பொருள் வரிகளும் அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் சுகாதார அணையாடைகளுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 10 சுகாதார அணையாடைகள் அடங்கிய ஒரு பக்கற்றின் விலை 50 தொடக்கம் 60 ரூபாவால் குறைவடையும்.
அதற்கமைய அதன் அதிகபட்ச சில்லறை விலை 260 தொடக்கம் 270 ரூபாவாக இருக்கும். அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் முடிவுப்பொருட்களின் நுகர்வோர் சில்லறை விலைகளும் 18 வீதம் அல்லது 19 வீதத்தால் குறைவடையும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக வரிச்சலுகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.