November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”போராட்டத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்”

காலிமுகத்திடல் போராட்டக் களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களுக்கு தண்டனை வழங்குவதை விடுத்து அவர்களை சமூக மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு பணியகங்கள் தொடர்பான சட்டமூலம், போராட்டக்காரர்களுக்கு எதிரானது என்று சிவில் அமைப்புகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அது குறித்து வெலிமடை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே நாமல் ராஜபக்‌ஷ இதனை தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான யோசனை அரசாங்க தரப்பிலிருந்து முன்வைக்கப்படவில்லை என்று அதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அவர்களை சிறையில் அடைத்து , தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக்கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும் என்று நாமல் ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், போராட்டத்தை வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கும்போது, அதற்கு ஆதரவு வழங்கிய இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும் தடுத்து வைப்பதும் பயனற்றது என்றும், வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.