ஒக்டோபர் முதலாம் திகதியான இன்று சர்வதேச சிறுவர் தினமாகும்.
சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு உலகளாவிய ரீதியில் இந்த தினம் கொண்டாடப்படுகின்றது.
சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது. அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பெரியவர்களாகிய நாம் இதை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு அவர்களுக்கான உன்னதமான உலகத்தை உருவாக்க வேண்டும்.
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர், சிறுவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியில் இருந்து தற்போதைய சமூகப் பின்னணி மிகவும் வித்தியாசமானது என்பது தெளிவாகிறது. இத்தகைய பின்னணியில், நாட்டின் அனைத்து சிறுவர்களுக்கும் சரியான அளவு கலோரி அடங்கிய ஊட்டச்சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரச தலைவர் என்ற வகையில் எனது கடமையாகும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய தலைமுறைக்கு போஷாக்கான உணவை வழங்குவதும், எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதுமே இத்தருணத்தில் தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முதியோர் தின வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிறுவர்களின் அழகிய குழந்தைப் பருவத்தையும், நமது நாட்டின் வளர்ச்சிக்காக அளவில்லா தியாகங்களைச் செய்த முதியோர் சமூகத்தையும் பராமரிப்பது நமது கடமையாகும் என்று அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.