November 26, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பூகோள அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன”

கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பிரதான அமர்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் ஆர்.மார்கஸ் ( ஜூனியர்) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க, உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை குறைத்துள்ளதுடன், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் வசிக்கும் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பெரும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் கடனை நிலைநிறுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் எவ்வாறு இந்த நெருக்கடியை தீர்க்கிறோம் என்பதை பல நாடுகளைப் போலவே பங்குதாரர்களும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்  என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.