இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 275 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 43 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் என்றும், ஏனைய 232 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இது வரையில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 11,335 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர்களில் 6064 பேர் தற்போது 46 மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், 5,249 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஒரு மாதத்தில் 2 இலட்சத்திற்கும் அதிகமான பீசீஆர் பரிசோதனைகள்
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தையில் இருந்து பரவிய கொரோனா தொற்று தொடர்பாக இது வரையில் 207,819 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2 ஆம் திகதி முதல் நவம்பர் 1 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவற்றில் 206,422 பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகியுள்ளதாகவும் இவற்றின் ஊடாக 7600 பேர் வரையிலானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் செயலணி தெரிவித்துள்ளது.
உடைந்த இயந்திரத்தை சீர்செய்த சீனா
முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், செயலிழந்த பிசிஆர் இயந்திரம் சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து கடந்த மே மாதத்தில் கொண்டு வரப்பட்டிருந்த குறித்த இயந்திரம் அண்மையில் செயலிழந்ததால், பிசிஆர் பரிசோதனை அறிக்கைகளை உரிய தினத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, சீனாவிலிருந்து நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு இயந்திரத்தை சீர்செய்துள்ளதாக சீன தூதரகம் கூறியுள்ளது.
இதன்படி இன்றிலிருந்து முறையாக பிசிஆர் பரிசோதனைகளை இங்கு முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொரோனா வேகம்
கொரோனா தொற்று மேல் மாகாணத்தில் வேகமாகப் பரவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று மிக வேகமாக பரவுவதால், மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கம்பஹாவில் 179 தொற்றாளர்கள்
நேற்று கம்பஹா மாவட்டத்தில் 179 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு 1-15 வரையான பகுதிகளிலிருந்து 51 தொற்றாளர்களும் கோட்டை – 30, மீதொட்டமுல்ல – 3, வெல்லம்பிட்டிய – 1, மருதானை – 1, மட்டக்குளிய – 1, கொலன்னாவ – 3, கொடிகாவத்த – 1, பொரளை – 2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 33 தொற்றாளர்களும் மத்திய மாகாணம் குண்டசாலையில் – 1, நுவரெலியா – 3, நாவலப்பிட்டிய – 1 தொற்றாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுயதனிமைப்படுத்தலில் 67,000 பேர்
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்போது 67,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித்ரோஹண தெரிவித்தார்.
யாழ்.பல்கலை விரிவுரையாளர் தனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் ஒருவர் தனது குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர், யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவருடைய உறவினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் நெருங்கிய உறவினர் ஒருவர் நல்லூர் பகுதியிலுள்ள வீடொன்றுக்கும் சென்று வந்துள்ளாரென அறிய முடிகிறது.
இந்நிலையில் மகனின் குடும்பமும் தனிமைப்பட்டு, பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் விரிவுரையாளர் உட்பட குடும்பத்தாருக்கு கொரோனா தொற்று இல்லையென முடிவுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும் குறித்த குடும்பத்தினை தொடர்ந்தும் 14 நாள்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் குறித்து கோரிக்கை
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களை தகனம் செய்யும் தற்போதைய முறைமையை மாற்றுவதற்கான தங்களது முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக புத்தளம் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலி சப்ரி ரஹீம் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 6 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் எம்.பிக்களுடன் சேர்ந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் பக்கம் சென்ற ஆறு உறுப்பினர்களில் ஒருவரான ரஹீம், நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு வீதம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிரணிக்கு தேவையான விதத்தில் நாட்டை முடக்க முடியாது
தனிப்பட்ட நபர்களின் தேவைக்கு அமைய நாட்டில் பொருளாதாரத்தை நாசப்படுத்தும் வகையில் தீர்மானம் எடுத்து, முழு நாட்டையும் முடக்க அரசாங்கம் தயாராக இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு நாடு முடக்கப்பட தேவையேற்பட்டால், மிக முக்கியமான தருணத்திலேயே அதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
வெலிபன்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கும் சுற்றுநிருபத்துக்கு அமைய அவர் செயற்படாமை குறித்து, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைவாக இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்காமை மற்றும் அவர்கள் தொடர்பில் எவ்வித மேற்பார்வையும் செய்யவில்லை என்று, வெலிபன்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா விடுதிகளுக்கு பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் நால்வருக்கு கொரோனா
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படைப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
65 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் நான்கு பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனை கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி உறுதிப்படுத்தியுள்ளார்.