இலங்கை எதிர்நோக்கும் வெளியக மற்றும் உள்ளக சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வாய்ப்பாக அமையும் என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேத அமைச்சர் இதனை தெதரிவித்துள்ளார்.
நாம் எதிர்கொள்ளும் வெளியக மற்றும் உள்ளக சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், இது எமது மக்களுக்கு மீட்பு மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நியாயமான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு சந்தர்ப்பம், எதிர்காலத்திற்கான எமது கூட்டுப் பார்வையை நனவாக்குவதற்கான தருணம் இதுவென இலங்கை நம்புகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமது இந்தப் பயணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் நீடித்த சமூக அமைதியின்மை மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது உரையில், ´தேசம் கோரும் சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்களை நான் செயற்படுத்துவேன்´ எனக் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் அலி சப்ரி, இந்த நடவடிக்கைகளில் தற்போதைய நடைமுறைகளின் மீளாய்வு, ஜனநாயக நிர்வாகத்தின் நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வது ஆகியவை அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உண்மையான நம்பிக்கையில் கையில் இருக்கும் நெருக்கடியிலிருந்து நாங்கள் மீண்டெழுவோம். சிறப்பாக நாட்டைக் கட்டியெழுப்புவோம். யாரையும் விட்டுவிடாமல், சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தின் புதிய எல்லைகளை நோக்கி எழுந்து நிற்போம் என்றார்.