ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மான வரைபொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தீர்மான வரைபிற்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகிய நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.
குறித்த தீர்மான வரைபுக்கமைய மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்புகளையும், 54 ஆவது அமர்வில் எழுத்துப்பூர்வ புதுப்பிப்பு மற்றும் அதன் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மேலதிக தெரிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தத் தீர்மானத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பாதுகாப்பு, உணவு, மருந்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம் உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுவதை மேம்படுத்துமாறு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மான வரைபுக்கமைய மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.