”ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து எனக்கு கிடைத்த வாழ்த்து மடல்களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி அனுப்பிய வாழ்த்து மடல் மிகவும் விசேடமானது. அதுவே அவரிடமிருந்து கிடைத்த இறுதி வாழ்த்து மடலாகும்” என்று என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணியின் மறைவுக்காக மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில். இலங்கை பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட அனுதாப பிரேரணையின் போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகாராணி அவருடைய கணவரின் மறைவுக்குப் பின்னர் மிகவும் பலவீனமடைந்தவராகவே இருந்தார். என்றாலும் இப்படியானதொரு திடீர் மறைவை நாம் யாரும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
சிலோனின் மகாராணியாக அவர் இருந்த காலப்பகுதியில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சிலோன் சிறிலங்காவானது. இவரது ஆட்சியின் கீழ் மிகச்சிறந்த அரசியல் தலைவர்கள் உருவானார்கள். தேர்தலில் 1956 இல் வெற்றிக்கண்டது. இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது. இலவசக் கல்வியைப் பெறும் புதிய தலைமுறையொன்று உருவானது. பொருளாதாரம் அரச கட்டுப்பாடுக்குள்ளானது. இரண்டு சதித்திட்டங்கள் மற்றும் தெற்கில் ஆயுத எழுச்சியின் ஆரம்பம் என்பன அவ்வாறான குறிப்பிட்டுக் கூறும்படி மாற்றங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகாராணி தீவிரமான கிறிஸ்தவராக இருந்த போதிலும் அவர் 1815 அம் ஆண்டின் கண்டி பிரகடனத்துக்கமைய பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றும், நாட்டின் தலைவரென்ற வகையில் தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாட்டு அரசர்கள் மற்றும் பர்மாவின் அப்போதைய ஜனாதிபதி ஆகியோருடன் இணைந்து 2500வது புத்த ஜயந்தியை கொண்டாட மகாராணி எடுத்த முயற்சி பலரும் அறியாதவொரு விடயமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது ஆட்சியின் இறுதியில் எமது நாடு குடியரசாக மாறியபோதும், இரண்டு விடயங்கள் மட்டும் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அதில் ஒன்று இனப்பிரச்சினையின் தோற்றம். இதனால் பாரிய எழுச்சிகள் உருவானது. எனினும் அது இன்னும் தீர்வு காணப்படாமலேயே உள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் தனது உரையில் குறிப்பிட்டார்.