
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானியா வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும்பிரித்தானியா வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை சந்திப்பு நடைபெற்றது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரித்தானிய வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.