July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் காணி அபகரிப்பு: விசாரணை கோரும் சட்டமா அதிபர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் காணிகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, மோசடியில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரசியல் ரீதியாக செல்வாக்குமிக்க குழுவொன்று வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கையர்களின் காணிகளை வலுக்கட்டாயமாக அபகரித்து, விற்பனை செய்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அண்மையில் வெளியாகியிருந்த சி.சி.டி.வி காட்சி நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சி.சி.டி.வி காட்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் பெயர்கள் கூறப்படுகின்றது.

இதுதொடர்பாக டுவிட்டர் செய்தியொன்றைப் பதிவிட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதாவது,

‘சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். அது என்னையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் குறிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே இந்த விடயத்தை கவனித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது! எனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.’

சி.சி.டி.வி காட்சிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையில், அம்பாந்தோட்டை நகர மேயர் உட்பட நான்கு பேர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த விவகாரத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும் சட்ட மா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.