November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை அமெரிக்கா வழங்கும்”

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலேன் தெரிவித்துள்ளார்.

இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது.

நிதி தொடர்பான உத்தரவாதங்களை விரைவுபடுத்துவது என்ற பொதுவான இலக்கிற்காக இலங்கையுடன் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இச்செயன்முறையில் பங்கெடுத்துள்ள பரிஸ் கிளப்பின் ஏனைய உறுப்பினர்களுடனும் அதே இலக்கிற்காக இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவேளை இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவர்களின் ஏனைய அரச முகவர் அமைப்புக்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்ந்து செயற்படுவதாகவும் அமெரிக்க திறைசேரி உறுதியளித்துள்ளது.

மேலும் அமெரிக்காவால் இலங்கை மக்களுக்கென வழங்கப்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கான போஷாக்கு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான உணவு கூப்பன்கள், உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உரம் மற்றும் நிதியுதவி தொடர்பிலும் அமெரிக்கா நினைவுகூர்ந்துள்ளது.