நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தங்களால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக இல்லாதொழித்து நாட்டு மக்களை மந்தபோசணைக்கு கொண்டு சென்ற தரப்பினர் தற்போது புதிய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றும், அவர்கள் இப்போது மேலவை இலங்கை கூட்டணி என்பதொன்றை உருவாக்கியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் மந்த போசனைக்குள்ளாகியுள்ள பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத நிலையில் உள்ள போது தீக்கிரையாகிய வீடுகளுக்கான நட்டஈட்டை அரசியல்வாதிகள் இரட்டிப்பாக்கியுள்ளார்கள் என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் வெளிநாடுகளில் முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தாக குறிப்பிட்ட அவர், எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த உதவிகளுக்கு நாட்டில் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு ஆகியவற்றுக்கு தீர்வு அவசியமாகும் என்றும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.