January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”புதிய போராட்டத்தை ஆரம்பிப்போம்”

இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டது. இரண்டாவதாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை என்ற நாடு தமிழ், சிங்கள, முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. நாம் ஒவ்வொரு நாளும் பிச்சையெடுத்துக் கொண்டும், கடன் எடுத்துக் கொண்டும் இருக்க முடியாது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று யாராக இருந்தாலும் யாரும் வங்குரோத்து அடைய விரும்புவதில்லை.

எனவே, கடன் பெறாத பொருளாதாரம் ஒன்றை உருவாக்க ஒன்றுபடுவோம். இளைஞர்கள் மாற்றத்தைக் கோரி முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். அந்தப் போராட்டம் முடிந்துவிட்ட நிலையில், நாட்டைக் கட்டியெழுப்பும் இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.