File Photo
இலங்கையில் பல மாவட்டங்களிலும் தொடரும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் பிரதேசங்கள் பலவற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அத்தனகளு, களு, களனி, கிங் மற்றும் நில்வலா கங்கைகளை அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் வௌ்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் மணித்தியாலங்களில் மழை தொடருமாக இருந்தால் வெள்ளம் ஏற்படலாம் என்றும், இதனால் குறித்த பகுதிகளில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் வசிப்போருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவுக்கான ஏதேனும் அறிகுறிகள் தென்படுமாக இருந்தால் உடனடியாக அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அனர்த்தங்களின் போது உடனடியாக செயற்படக் கூடிய வகையில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.