January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அகதிகளை தயாகம் அழைத்துவர விசேட குழு நியமனம்!

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளை, தாயகம் அழைத்து வருவது தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இந்த குழுவில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், வௌிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களை தாயகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு, ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு  விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பின் பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ். சந்திரஹாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

தமிழகத்தில் சுமார் 58,000 இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 3,800 பேர் மாத்திரமே தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.