File Photo
நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது.
அவரை தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் அனுப்பி, முக்கிய பதவியை அவருக்கு வழங்க அந்தக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி முன்னாள் ஜனாதிபதிக்காக தனது ஆசனத்தை வழங்க தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
ஜுலை மாதத்தில் இடம்பெற்ற தனக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஜுலை 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று அதிகாலை நாடு திரும்பியிருந்தார்.
அவரை வரவேற்பதற்காக பெருந்திரனான பொதுஜன பெரமுன எம்.பிக்கள் கட்டுநாயக்க விமான நிலையம் சென்றிருந்னர்.
இதனை தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, அவரின் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை தான் அரசியலில் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவினால் இதுவரையில் எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை. ஆனால் அவரை அரசியலில் தொடர்ந்தும் இருக்குமாறு பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் அவரை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.